search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா புயல் பாதிப்பு"

    கஜா புயல் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 75 அடி உயர டவரில் ஏறி வேதாரண்யம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் கரையை கடந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் மீனவர் கிராமங்களில் வீடுகள் சேதமானதுடன், மீன்பிடி படகுகளும் உடைந்து சேதமானது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 75 நாட்களுக்கும் மேலாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    புயலில் சேதமான படகுகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்தது. ஆனால் மீனவர்களுக்கு சேதமான படகுகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய படகுகள் வாங்கி கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர்.

    மீனவர்கள் அதிகாரிகளிடம் நிவாரணம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள திசைக்காட்டும் கருவிக்கு அமைக்கப்பட்டுள்ள 75 அடி உயர டவரில் ஏறி தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். புதிய படகுகள் வாங்க உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லையேல் டவரில் இருந்துகுதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் பரவியதும் அங்கு ஏராளனமான மீனவர்கள் குவிந்தனர். அவர்களும் போராட்டம் நடத்திய மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் தீயணைப்பு துறையினர், கடலோர காவல் குழுமத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஆறுக்காட்டுத் துறை மீனவர் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.  #GajaCyclone
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசித்து வருகிறார். #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அடுத்த கொண்டி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்லதுரை (வயது 50). இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் விவசாய வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த கஜா புயலில் தங்களின் வீட்டை முற்றிலுமாக இழந்து விட்டனர். வீடுகட்ட பொருளாதார வசதியின்றி தவித்து வந்தனர்.

    தங்குவதற்கு வேறு வழி இன்றி அருகில் உள்ள சுடுகாட்டில் உள்ள சமாதியில் 60 நாட்களாக குடியிருந்து வருகின்றனர்.

    பொங்கல் அன்று வீட்டை இழந்த அந்த பழைய இடத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

    இதுபற்றி விவசாயி செல்லத்துரை கூறியதாவது:-

    கஜா புயல் எங்களது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. வீட்டை இழந்த நாங்கள் சுடுகாட்டில் உள்ள சமாதியில் டெண்ட் போட்டு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசோ அல்லது தனியார் அமைப்புகளோ வீடு கட்ட உதவி கரம் நீட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    கஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் இங்கே பதிவு செய்துள்ளார். அது தவறானது. வருவாய்த்துறை அமைச்சர் சொன்னதைப்போல, கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எல்லாம் கலந்து கொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், வருவாய்த் துறை அமைச்சர் சொன்னதைப் போல, புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அவர்களுக்கு துணையாக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களும் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு  மணிக்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    போக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அழைத்து வந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.

    கோப்புப்படம்

    கிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஆகவே, கஜா புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    சட்டசபையில் இன்று கஜாபுயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    கஜாபுயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பயிர்களும் மரங்களும் விழுந்தன. வீடுகள் பெரும் சேதம் அடைந்தன. 78 ஆயிரத்து 584 ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. 23 ஆயிரத்து 141 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    20 ஆயிரத்து 357 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 5 லட்சத்து 5 ஆயிரத்து 742 குடிசைகள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இவை அனைத்தையும் சீரமைத்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

    கஜா புயல் பாதிப்பு பற்றி அறிந்ததும் உறவினர்கள் மூலம் நான் அந்த பகுதிகளை பார்வையிட சென்றேன். மழை மற்றும் வானிலை காரணமாக சில இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பாதிப்பின் தாக்கத்தை என்னால் அறிய முடிந்தது. அந்த மக்களுக்கான உதவிகளை உடனடியாக செய்வதற்காக அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.

    மின் இணைப்புகள் கொடுக்கும் பணி இரவு பகலாக நடந்தது. நிவாரண பணிகளில் தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கின்றன.

    பல்வேறு சூழ்நிலை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் இந்த பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நிவாரண முகாமில் தங்கிய அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. சரிந்த தென்னை மரங்களை அகற்றவும், விவசாயிகள் மறு சீரமைப்புக்காக சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    11 லட்சத்து 66 ஆயிரம் பேர் இந்த புயலின் போது பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. புயல் நிவாரணம் பாதிப்புக்கு தகுந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். மத்திய அரசின் குழுவும் உடனே வந்து கணக்கீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியும் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரணம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    இதுபோன்று விவசாயிகளுக்கும் தேவையான நிவாரண உதவியை வழங்க அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கும்.

    கஜா புயலின் போது இரவு-பகலாக மீட்பு பணிக்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் அங்கேயே தங்கி இருந்து பணிகளை விரைவாக செய்ய உதவிய அமைச்சர்களுக்கும், நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கீட்டின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
    பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் 16-ந்தேதி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த போது டெல்டா மாவட்டங்களை மிகக்கடுமையாக சேதப்படுத்தியது.

    நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன. புயல் சீற்றத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள், தென்னை, வாழை மரங்கள் முற்றிலுமாக அழிந்தன. அதுபோல சுமார் 57 ஆயிரம் குடிசை வீடுகளும் சேதம் அடைந்தன. 21 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்தன.

    வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டது. இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இழந்த டெல்டா மக்கள், தற்போது தான் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நடுத்தர வசதி கொண்ட மக்கள் புயலால் சேதம் அடைந்த தங்களது வீடுகளை தாங்களே பழுது பார்த்துள்ளனர். ஆனால் நிரந்தர வருவாய் இல்லாத ஏழைகள், முற்றிலும் சேதம் அடைந்த குடிசை வீடுகளை மீண்டும் கட்டிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.


    குடிசை வீடுகளை புதிதாக கட்டவும், சீரமைக்கவும் கடன் வாங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய பரிதாப நிலையில் உள்ள ஒரு ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே விற்ற அவலம் நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காரிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற கூலித் தொழிலாளிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவரது இரண்டாவது மகன் பெரமையா. இவனுக்கு 12 வயதாகிறது.

    தினமும் கூலி வேலை செய்து பிழைத்து வந்த நிலையில் மாரிமுத்துவின் குடிசை வீடு, கஜா புயலால் முற்றிலும் அழிந்து போனது. புதிய குடிசை வீடு கட்ட அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அடகு வைத்து பணம் புரட்டவும் அவரிடம் எதுவும் இல்லை.

    மகன் மட்டுமே இருந்த நிலையில், அவனை தற்காலிகமாக விற்று பணம் பெற ஏழை தினக்கூலித் தொழிலாளியான மாரிமுத்து முடிவு செய்தார். அதன்படி 3 வாரங்களுக்கு முன்பு 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி ஒரு பண்ணைத் தோட்டத்து முதலாளியிடம் விற்று விட்டார்.

    நாகை மாவட்டத்தில் பனங்குடி என்ற கிராமத்தில் ரெட்டி திருவாசல் தெருவைச் சேர்ந்த பண்ணைத் தோட்டத்து உரிமையாளர் சந்துரு என்பவர் அந்த சிறுவனை வாங்கி இருந்தார். அந்த சிறுவனை அவர் பண்ணைத் தோட்டத்து வேலைகளில் ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு மட்டுமின்றி ஆடு மேய்க்கும் வேலையிலும் அந்த சிறுவன் ஈடுபடுத்தப்பட்டான்.

    இந்த நிலையில் பனங்குடி பண்ணையில் 12 வயது சிறுவன் கொத்தடிமை போல வேலையில் உள்ளதாக சிறுவர்கள் நல அதிகாரிகளுக்கு 1908 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் வந்தது. இதையடுத்து கடந்த 22-ந்தேதி மாவட்ட அரசு அதிகாரிகளும், சைல்டு லைன் உறுப்பினர்களும் அந்த பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.

    அப்போது 12 வயது சிறுவன் பெரமையா கொத்தடிமை போல இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். பிறகு அந்த சிறுவன் நாகை உதவிக் கலெக்டர் கமல்கிஷோர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    அங்கு அவனிடம் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கஜா புயலால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு சோகம் காரணமாக அந்த சிறுவனை அவனது பெற்றோரே விலை பேசி விற்று விட்ட அவலம் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த சிறுவன் நாகையில் உள்ள சிறுவர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கடந்த திங்கட்கிழமை அந்த சிறுவனை விடுவிப்பதற்கான சான்றிதழை நாகை உதவி கலெக்டர் அமல்கிஷோர் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் தஞ்சை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டான். அங்கு அவன் சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளான்.

    இதற்கிடையே ஏழ்மையைப் பயன்படுத்தி அந்த சிறுவனை விலைக்கு வாங்கியது குறித்து நாகை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கிய பண்ணைத் தோட்ட உரிமையாளர் சந்துரு மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொத்தடிமை தொழிலாளர்கள் சட்டம்-1976ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அந்த சிறுவனின் தந்தையிடமும் அரசு அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மாரிமுத்து கூறுகையில், “கஜா புயலால் எங்கள் வீடு தரைமட்டமாகி விட்டது. அதை பழுது பார்க்க எங்களிடம் எந்த பணமும் இல்லை.

    வயல்களிலும் வேலை வாய்ப்பு இல்லை. எனவே தான் இந்த முடிவு எடுக்க வேண்டியதாகி விட்டது. எனது மகனை அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தால் இதை செய்தேன்” என்றார். #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர்ராஜு பதில் அளித்துள்ளார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
    கடலூர்:

    கடலூருக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வருகை தந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமானால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்றனர்.

    குழு அமைத்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேத மதிப்பீடு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 4 லட்சத்து 19 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரம்.

    இதுபோக வெளியிடங்களிலும் வெளி நபர்களிடம் பலர் கடன் வாங்கியுள்ளனர். அனைவரையும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளோம்.

    மேலும் தமிழக அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்க உள்ளது. ஆகையால் இந்த அரசு விவசாயிகள்அரசு என்று எடுத்துக் காட்டுகிறது.


    ஜெயலலிதா அரசு பதவி ஏற்ற பிறகு தான் கூட்டுறவுத்துறை லாபத்தில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 147 நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி கொடுத்து அதன்மூலம் வரவு செலவு செய்து வருகின்றனர். ரே‌ஷன் கடை பணியாளர்களை நியமிக்க வேண்டுமானால் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அமைத்த பிறகு ரே‌ஷன் கடை பணியாளர்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

    கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை தனிப்பட்ட நிர்வாக அமைப்பு. இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்க முடியாது மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகக் குழு தீர்மானம் செய்து அவர்கள் நிதி ஒதுக்குவார்கள்.

    தமிழகத்தில் 22 ஆயிரத்து 265 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் சாமர்த்தியமாக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
    கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர 1¼ லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். #GajaCyclone
    சென்னை:

    வறுமை ஒழிப்பு, வேலை செய்யும் உரிமை, பெண்களுக்கு சமத்துவ உரிமை ஆகிய ஊரக மேம்பாட்டு அம்சங்களுக்கு அடித்தளமிட்ட திட்டமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமைந்துள்ளது. மத்திய அரசில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது இந்தத் திட்டம் தமிழகத்தில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி அமலுக்கு வந்தது. முதலில் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக (சென்னை தவிர) 31 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் நிதிப் பங்களிப்பு செய்கின்றன.

    இந்த திட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 நாட்களுக்கு ஒருவர் வேலை பெற முடியும். பணியாற்றி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். திட்டத்தின் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஊதியம் ரூ.80 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறகு 2009-10-ம் ஆண்டில் ரூ.100 என்று உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.224ஐ எட்டியுள்ளது. இந்த ஊதியத் தொகை, பணியாளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். 18 வயதைக் கடந்த எவரும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதி உடையவராவர்.

    தமிழகத்தில் இந்தத் திட்டம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரகப் பகுதிகளில் வீட்டுக்கு உள்ளேயே கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களில் 84.78 சதவீதம் பேர் இன்று இந்த திட்டத்தின் கீழ் வேலையும் ஊதியமும் பெறுகின்றனர். ஆணும், பெண்ணும் பணிக்குச் சென்று ஊதியம் பெறுவதால், சமூக, பொருளாதார ரீதியில் அந்தக் குடும்பம் முன்னேற்றமடைவதோடு, ஊரகப் பகுதியும் மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 153 வகையான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 100 இயற்கை வள மேலாண்மைப் பணிகளாகும். இந்த 100 பணிகளில் 71 சம்பந்தப்பட்ட பணிகள், நீர் தொடர்புடையவை ஆகும்.

    சாதாரண காலகட்டங்களில் 100 நாட்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் 150 நாட்கள் வரை வேலை நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 131 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 80.74 லட்சம் பேர் பெண்கள். பதிவு செய்தவர்களில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 87.40 லட்சமாகும். அவர்களில் 67.75 லட்சம் பேர் பெண்கள்; 24.84 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்; 1.25 லட்சம் பேர் பழங்குடியினராகும்.

    இந்தத் திட்டத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 4.07 லட்சம் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.3,803.74 கோடி நிதியை மத்திய அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. கட்டுமானப் பொருள் செலவீனம் மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியமாக ஒதுக்கப்பட்ட ரூ.842.89 கோடி தொகையில் 25 சதவீதத்தை தமிழக அரசு தனது பங்காக அளிக்கிறது.

    இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. 15 நாட்களுக்குள் 99.19 சதவீதம் ஊதியம் வழங்கி அதற்கான விருதை தமிழக அரசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் அதிகம் நம்பியிருந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழில் அழிந்துவிட்டது. பயிர்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கோப்புப்படம்

    இருந்த வேலையை இழந்து, வருமானத்துக்கு வழியில்லாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றுதான் உடனே கைகொடுக்கும் திட்டம் என்பதால் அவர்கள் பலரும் இந்த மாவட்டங்களில் வேலை கேட்டு பெயர்ப் பதிவு செய்தனர்.

    இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கு பதிவு செய்து, பணியாற்றுவோரின் எண்ணிக்கை தற்போது அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. அதன்படி சாதாரணமாக நாளொன்றுக்கு 37 ஆயிரத்து 932 பேர் பணியாற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரத்து 68 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 55 ஆயிரம் பேரும்; 12 ஆயிரத்து 76 பேர் பணியாற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக 35 ஆயிரத்து 924 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 48 ஆயிரம் பேரும்; 15 ஆயிரத்து 323 பேர் பணியாற்றும் நாகை மாவட்டத்தில் கூடுதலாக 42 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 58 ஆயிரம் பேரும்; 42 ஆயிரத்து 141 பேர் பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 859 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 74 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் கூடுதலாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவர்கள் அனைவரும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அறுத்தல், வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல், சாலைகள் சீரமைப்பு, சேதமடைந்த அரசு கட்டிடங்கள் சீரமைப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதல் நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக முடிவு செய்துள்ளது. #GajaCyclone
    புதுக்கோட்டை அருகே புயலால் பாதித்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார். #GajaCyclone
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமமானது செழிப்பான பகுதியாகும். இங்கு மலர்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் தென்னை, பலா, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

    கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். விவசாயமும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது கடையில் டீ குடித்ததற்காக நீண்ட நாட்களாக கடன் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

    இது குறித்து சிவக்குமார் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாக்கித்தொகையை அவர்களால் இப்போதைக்கு திருப்பி வழங்க முடியாது என்று நினைத்தேன்.

    அதனால் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யும் வகையில் ஒட்டுமொத்த கடன் பாக்கியையும் தள்ளுபடி செய்து விட்டேன் என்றார். விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #GajaCyclone
    கஜா புயலால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பட்டுக்கோட்டை:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 16-ந் தேதி கஜா புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பேய் காற்றில் டெல்டா மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகளை இழந்தும், பயிர்களை இழந்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கஜா புயல் பாதிப்பால் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் புயலால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் கலைவாணன் (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கஜா புயலால் கருணாநிதி வசித்து வந்த ஓட்டுவீடு சேதமடைந்தது. மேலும் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நின்ற மரங்கள் பல முறிந்து பேரிழப்பை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் கஜா புயலில் தங்களது வீடு மற்றும் தென்னந்தோப்பு பாதிக்கப்பட்டது குறித்து சிங்கப்பூரில் இருந்த கலைவாணனுக்கு அவரது குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். இதை கேட்டு அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

    அப்போது அவர் தனது குடும்பத்தினரிடம் சேதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு கவலையில் ஆழ்ந்தார். இதில் இருந்து தங்கள் குடும்பம் மீள்வது கடினம் என்று கருதி மனமுடைந்த அவர் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று விபரீத முடிவு எடுத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தியடைந்த கலைவாணன் சிங்கப்பூரில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான திட்டக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    தங்களது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டி வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்த கலைவாணன் புயல் ஏற்படுத்திய இழப்பை அறிந்து தற்கொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட கலைவாணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
    கஜா புயலால் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மிகவும் பாதித்த 50 கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்க தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

    புயலில் அதிக அளவில் சேதமானது அந்த பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்கள் தான்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மிகவும் பாதித்த 50 கிராமங்களை மா.சுப்பிரமணியன் தேர்வு செய்துள்ளார்.

    இந்த கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

    இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நவீன ஒட்டு ரக மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை அருகில் உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்குகிறார்.
    கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. #GajaCyclone
    கீரமங்கலம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் அமெரிக்க வடக்கு கரோலினா நகரில் தமிழகத்தை சேர்ந்த வாகை மகளிர் குழுவினர் மொய் விருந்து நடத்தி இந்திய மதிப்பில் ரூ.3½ லட்சம் வசூல் செய்தனர்.

    இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், அனவயல், செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் சோலார் தெரு விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க டாலஸ் நகரில் தமிழர்கள் இணைந்து மொய் விருந்து நடத்தி ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்தனர்.


    இந்த நிலையில் விவசாயிகளின் தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றவும், அந்த நிலங்களில் மறுபடியும் தென்னை, பலா, தேக்கு போன்ற மரக்கன்றுகள் நடவும், விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள டாலஸ் நகரில் தமிழ் மலரும் மையம், தமிழ் பள்ளிகள் சார்பில் பிரமாண்டமான மொய்விருந்து நடத்தினர்.

    இதில் 250 தமிழ் குடும்பங்கள் உள்பட இந்திய குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடப்பது போல தரையில் விரிப்புகள் போட்டு, தலை வாழை இலைகள் வைத்து அறுசுவை உணவுகளை ஏற்பாட்டாளர்களே பரிமாறினர்.

    இந்த மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. இதுகுறித்து மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெய்நடேசன், கீதா சுரேஷ், பிரவீணா வரதராஜன் ஆகியோர் கூறியதாவது:-

    கஜா புயலால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி மறுநடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மறுவாழ்வுக்கு வழி செய்யவில்லை. இதனால் தான் குறுகிய காலத்தில் கலாசார முறைப்படி உதவிகள் பெற தமிழகத்தில் மொய் விருந்து நடத்துவது போல அமெரிக்காவிலும் நடத்தினோம். முடிந்த அளவு அழைப்புகள் அனுப்பினோம்.

    இதில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு தாராளமாக மொய் செய்தார்கள். இதில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்துள்ளது. எங்களால் ஒரு கிராமத்தை மீட்க முடியும் என்று நம்புகிறோம். அதேபோல் நல்ல சம்பளத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் விரைவில் நம் விவசாயிகளை மீட்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா? என்று அரசு அதிகாரியை கமல்ஹாசன் கண்டித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan
    திண்டுக்கல்:

    தமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், வெள்ளைப்பூண்டு, உருளை கிழங்கு செடிகளை நாசம் செய்தது.

    மீட்பு பணிகள் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பெரும்பாறை, மலையக்காடு, கோரங்கொம்பு, கே.சி.பட்டி, குரவனாச்சி ஓடை, பாச்சலூர், குரங்கணிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளையும், ஆதிவாசி மக்களையும் சந்தித்து குறைகள் கேட்டார்.

    அப்போது மலை கிராம மக்களிடம் அரசின் நிவாரண உதவிகள் கிடைத்துள்ளதா? என கேட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலரின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் குறித்த விவரங்களை கேட்டார்.

    அந்த எண்ணுக்கு தானே போன் செய்து பேசினார். அப்போது அரசு திட்டத்தில் வீடு கட்ட ரூ.1.80 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா? என கேட்டார். அதற்கு அந்த அதிகாரி அப்படி யாருக்கும் பணம் தரத்தேவையில்லை என்றார். பிறகு எதற்காக அப்பாவி மக்களிடம் பணம் கேட்கிறீர்கள்?

    யாரும் பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்களும் கண்காணித்து வருகிறோம் என்றார். இதனையடுத்து கிராம மக்களிடம் வீடு கட்ட நீங்கள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. யாரேனும் பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கூறுங்கள் என்றார்.

    இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு கம்பளி, ஸ்வெட்டர், தார்ப்பாய், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண உதவியை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. முதலில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முயற்சியில் நாங்கள் இறங்கி உள்ளோம். புயல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.



    இனிமேலாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.

    பின்னர் திண்டுக்கல்லில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும். மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்களது வாழ்க்கை இன்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக இடங்கள் சேதம் அடைந்துள்ளன.

    நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை. இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் 2-வது மாநிலமாக உள்ளது.

    ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வியாபாரத் தளமாக மட்டுமே பார்க்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை கஜாபுயல் பாதிப்பில் காட்ட தவறி வருகின்றனர்.

    எனவே தமிழகத்திற்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்.

    டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் அல்ல. அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHaasan
    ×